சென்னை, ஆக.31-: அரசின் இலவச திட்டங்கள் தொடரும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- தி.மு.கழக அரசின் இலவசத் திட்டங்கள் மக்கள் நலத்திட்டங்கள் என்பதைத் தாண்டி வாக்கு வங்கி அரசியலுக்காக எல்லை தாண்டிப் போவதாக ஒரு ஆங்கில இதழ் கட்டுரை தீட்டியிருக்கிறதே?
பதில்:- ஒரு பொருள் பற்றி வாதம் செய்வோர் உண்டு. எதிர் வாதம் செய்வோரும் இருப்பர். இவர்களை அன்னியில் மூன்றாவது அணியினர் ஒருபுறம் இருப்பார்கள். அவர்கள் தான் "குதர்க்க வாதம்" செய்வோர். அப்படிப்பட்ட ஒருவர் தான் தமிழக அரசின் இலவசத் திட்டங்களைப் பற்றி குறை கூறி அந்தக் கட்டுரையைத் தீட்டியிருக்கிறார் என்று கருதுகிறேன்.
அந்தக் கட்டுரையாளர் தன் வாதத்திற்கு ஆதரவாக சீனப் பழமொழி ஒன்றைத் துணைக்கு அழைத்திருக்கிறார். "பசி என்று வருபவனுக்கு மீனைக் கொடுக்காதே; மீன் பிடிக்கக் கற்றுக் கொடு" என்று எழுதியிருக்கிறார்.
அதாவது ஒருவன் பசி உயிர் போகிறதே என்று அவரிடம் கேட்டால், உடனடியாக அவனுக்கு ஒரு ரொட்டித் துண்டு வாங்கிக் கொடுப்பதற்குப் பதிலாக அவன் பசியில்லாமல் வாழ பாடம் நடத்தி எப்படியெல்லாம் மீன் பிடிக்க வேண்டும் தெரியுமா என்றெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டுமாம். அவன் அதைக் கற்றுக்கொள்வதற்குள் அவன் உயிரே போய் விடும்.
அய்யன் வள்ளுவர்; திருக்குறளில் "காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" அதாவது தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
ஒருவருக்கு செய்கின்ற உதவி உரிய காலத்தில் செய்யப்பட வேண்டும். மாறாக உன்னை நீயாகவே சம்பாதிக்க வைக்கிறேன், நீ இலவசமாக எதையும் பெறக் கூடாது என்றெல்லாம் கூறினால், அவன் அதற்குத் தயாராவதற்குள் போய்ச் சேர்ந்து விடுவான்.
இலவசத் திட்டங்களுக்காக செலவிடப்படும் தொகைகளையெல்லாம் குறிப்பிட்டு ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்திற்காக 150 கோடி- கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறு கால உதவி 250 கோடி என்றெல்லாம் கட்டுரை ஆசிரியர் பட்டியல் இட்டுள்ளார்.
இத்தகைய உதவிகளைப் பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளவர்கள் இருக்கும் வரை இத்தகைய உதவிகளைச் செய்து தான் ஆக வேண்டும். ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் முன்னேற்றம் அடைய செய்து விட்டோ மென்றால், அதன் பிறகு இலவசத் திட்டங்களை நிறுத்தி விடலாம்.
ஆனால் மக்கள் அந்த அளவிற்கு வாழ்க்கையிலே முன்னேறுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அதுவரை இத்தகைய உதவிகள் அளிக்கப்பட்டாக வேண்டுமென்பதுதான் கழக அரசின் குறிக்கோள். கட்டுரை ஆசிரியர் தமிழக அரசின் ஒட்டுமொத்த பற்றாக்குறை பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதாகவும், அப்படியிருக்கும் போது இலவசத் திட்டங்கள் தேவை தானா என்றும் வருத்தப்படுகிறார்.
இலவசத் திட்டங்களை வழங்காத மாநில அரசுகளில் பற்றாக்குறையே கிடையாதா? அப்படி எந்த மாநிலம் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது? அது மாத்திரமல்ல. தமிழக அரசு தனது மொத்த பட்ஜெட்டையும் இலவசத் திட்டங்களுக்குச் செலவு செய்யவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்காகவும், மக்கள் வாழ்க்கையிலே முன்னேற வேண்டும் என்பதற்காகவும் எத்தனையோ கோடிகள் நிதி ஒதுக்கியிருப்பதையெல்லாம் மறந்து விடக்கூடாது.
உதாரணமாக 2009-2010 ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் வேளாண்மைத் துறை, கால் நடைத் துறை, பால்வளத் துறை, மீன்வளத் துறை, கூட்டுறவுத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை போன்ற துறைகளில் விவசாய வளர்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள மொத்த நிதி ஒதுக்கீடு மட்டும் 5,236 கோடி ரூபாயாகும். 2005-2006ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் காவல் துறைக்காகச் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு 1,346 கோடி ரூபாய்.
அதனை இந்த ஆண்டு 2,855 கோடி ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம் என்றால், அந்தத் தொகை இலவசத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையா என்பதை கட்டுரை ஆசிரியர் தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.
நீர் வள நில வளத்திட்டத்திற்காக 533 கோடி ரூபாயும், நீதித்துறைக்காக 378 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்காக மட்டும் 9,147 கோடி ரூபாயும் உயர் கல்வித் துறைக்காக 1,463 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றால் அதெல்லாம் இலவசத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி என்று அந்த இதழில் கட்டுரை எழுதியிருப்பவர் எண்ணுகிறாரா?
எனவே இந்த அரசைப் பொறுத்தவரையில் ஏழைகள் ஓரளவிற்கு சமுதாய அந்தஸ்து பெறுகின்ற வரையில் இலவசத் திட்டங்கள் என்பது இன்றியமையாதது என்பது அனுபவ பூர்வமான உண்மையாகும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
நமக்கு இதை படித்தவுடன் தோன்றும் சில சந்தேகங்கள்!. யார் பதிலளிப்பார்கள்?
அரசாங்கம் என்பது தனிநபர் அல்லது தனியார் நிறுவனம் இல்லை. தமிழ் நாட்டு மக்களால், தங்களுடைய பொதுவான அடிப்படை தேவைகளை செய்ய அமைக்கப்பட்ட அமைப்பு. அது முற்றிலும் மக்களால் கொடுக்கப் படும்பணத்தை கொண்டு இயங்குவது. பச்சையாக சொல்வதாக இருந்தால், ஒரு வேலைக்கார அமைப்பு!. ஒரு வேலைக்காரன், தன்னுடைய எஜமானர்களுக்கு அவர்கள் பணத்தில் செய்வதை எப்படி இலவசம் என்று சொல்ல முடியும் ?. முதலமைச்சர் தனது அல்லது தன் அமைச்சர்கள் அல்லது தனது கட்சியிலிருந்து, இத்திட்டங்களுக்கு ஆகும் செலவு செய்யப்படுமானால், இதை " இலவச திட்டம் " என கூற முடியும். எனவே இது வெறும் திட்டம் மட்டுமே!. இலவச திட்டம் கிடையாது.
2. வாக்கு வங்கி அரசியலுக்காக செய்யப்படுகிறது என்பதை மறுத்துள்ளார். அவர் வைக்கும் வாதம் காமெடியாக இருக்கிறது. இதற்கு வள்ளுவரின் குறளை மேற்கோள் காட்டியுள்ளது கொடுமை!. "காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" - இதற்கு நமக்கு தெரிந்த பொருள் " ஒருவன் இக்கட்டான நிலையில் இருக்கும் பொழுது அவனுக்கு உதவுவதுதான் சிறந்தது". டி.வி பார்ப்பது எனபது ஒருவனின் அத்தியாவசிய தேவையா? அல்லது இது இக்கட்டான சூழ்நிலையா? எதுவுமே இல்லாமல் நடுத்தெருவில் பிச்சை எடுக்கும் லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இருக்கும் இடமும் , உண்ன உணவும் கொடுத்து அத்துடன் அவன் பிழைப்புக்கும் வழி செய்தால் அது உதவி திட்டம். கீழ் மட்டத்தில் இருக்கும் இவர்களை கண்டு கொள்ளவே இல்லையே? இருக்க இடம், மின்சார வசதி, கேபிள் கனெக்ஷன் உள்ளவனிடம் ஏன் இந்த பரிவு? பிச்சைக்காரனுக்கு வோட்டு கிடையாது ! ஆனால் இவனுக்கு உண்டு. இதை ஓட்டு வங்கி திட்டம் என்று சொல்வதில் என்ன தவறு? குடிகாரனுக்கு இலவச் மதுத்திட்டம், இலவச சின்ன வீடு திட்டம் போன்றவற்றையும் " காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" எனக்கூறி அமுல் படுத்த போகிறாரா? பசியென்று வருபவனுக்கு முதலில் மீனைக்கொடு. அடுத்தநாள் மீன் பிடிக்க கற்றுக்கொடு! (சீன பழமொழி) அர்த்தம்: அவலத்தில் உள்ள ஒருவனுக்கு அதில் இருந்து மீள வழி சொல்லு. பிறரில் என்றும் தங்கி இருக்க வைத்து அவன் நிலையை நீயும் மேலும் அவலம் ஆக்காதே! . இதை புரிந்து கொண்டும் விதண்டா வாதத்திற்காக, "உடனடியாக அவனுக்கு ஒரு ரொட்டித் துண்டு வாங்கிக் கொடுப்பதற்குப் பதிலாக அவன் பசியில்லாமல் வாழ பாடம் நடத்தி எப்படியெல்லாம் மீன் பிடிக்க வேண்டும் தெரியுமா என்றெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டுமாம்" என கூறுகிறார்.
சரி. இன்று பிச்சைகாரர்கள் போல கையேந்தி நிற்கும் இவர்கள் நிலை மாற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.
கட்டுரை எழுதுபவர்கள் இந்த நாட்டு மக்களில் ஒருவர் என்பதையும் அதை வெளியிடும் பத்திரிகைகள் ஜனநாயகத்தின் ஒரு தூண் என்பதை ஆட்சியில் இருப்பவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை முறையாக சொல்ல வேண்டிய கடமை பதவியிலிருப்பவர்களுக்கு உண்டு. காரணம் இப்பதவி மக்கள் வழங்கியது. பதவியிலிருந்து பெறும் வசதிகள் மக்கள் பணத்திலிருந்து கொடுக்கப்படு கிறது!.